மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

Saturday 15 November 2014


‘இறப்பிற்கு பின் நடப்பது என்ன...?’ என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றாக சொன்னாலும், சொல்பவர்களே அதனை நிரூபிக்க முடியாமல் திண்டாடுவதால், இப்படி தான் நடக்கும் என்று ஆணித்தரமாக நம்பவும் மனம் மறுக்கிறது.

இறப்புக்கு பின் என்ன நடக்கும், எது நடக்கும்... அதற்கப்புறமும் ஏதேனும் நமக்கென்று வாழ்க்கை இருக்கிறதா... என்ற குறுகுறுப்பு எல்லோர் மனதிலுமே இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

இந்த நெருடல் தான் கருடபுராணம் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தையும் என்னுள் அதிகரித்தது. அந்த ஆவல் நிறைவேறியதை உங்களுடனும் சேர்ந்து பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

இதில் வரும் தகவல்கள் வலைதளத்திலிருந்து திரட்டியவையே. இணையத்தில் தேடிய போது பெரும்பாலும் ஆங்கில வடிவத்திலேயே கிடைத்தது. அதிலும் PDF கோப்பாக. கிடைத்த ஒன்றிரண்டு தமிழ் வலைப்பூக்களிலும் முடிவுரை என்பது இல்லாமலிருந்தது. எப்படியோ அங்கொன்றும், இங்கொன்றுமாய் தேடி, போதாததற்கு கருடபுராண புத்தகங்களையும் புரட்டி...... ஒருவழியாக பதிவு தயாராகி விட்டது. ஆகவே, இதில் முக்கிய பங்கெடுத்துக்கொண்ட இணைய உலகிற்கு எனது மனமார்ந்த நன்றி.

இதில் சாமான்யர்கள் அறியாத விஷயங்கள் நிறைய இருக்கிறது என்பது இதனை படித்த பிறகு தான் தெரிந்தது. தெரிந்து கொள்ளவேண்டிய பல அவசியமான விஷயங்கள் நிறையவே இருக்கிறது.

இதனை படித்தால் மேற்கொண்டு செய்ய இருக்கும் பாவங்களில் இருந்தும், தாம் செய்வது பாவம் என்றே அறியாமல் பாவச்சுமையை ஏற்றிக்கொண்டிருக்கும் செயல்களில் இருந்தும் - தம்மை காத்துக்கொள்ள வழிகிடைக்கும்.

இப்படித்தான் வாழவேண்டும் என்ற வரைமுறைக்குட்பட்டு வாழ்ந்த வாழ்க்கை, கொஞ்சம் கொஞ்சமாய் எப்படியும் வாழலாம் என்ற கலாச்சாரத்திற்கு மாறிக்கொண்டிருக்கும் வேளையில், இப்புராணம் - வாழுகின்ற வாழ்க்கையை நெறிமுறையோடு வாழ வழி சொல்லும்.

மனிதர்கள் பயனுற கூறப்பட்டது தான் இந்த புராணம்? அப்படியிருக்க, இன்று பகவத் கீதை பிரபலமடைந்த (சென்றடைந்த) அளவிற்கு, இந்த புராணம் சாமானியர்களிடம் சென்றடையாதது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

துக்க வீடுகளில் படித்தால் நல்லது என்கிறார்கள். ஆனால், துக்க வீட்டில் மட்டும் தான் படிக்கவேண்டும் என்று பகவான் விஷ்ணு எங்கும் சொல்லவில்லை. மேலும், துக்கவீடுகளில் படிக்கலாம் என்பதே இங்கு  எத்தனை பேருக்கு தெரியும்?

கருடபுராணம் என்று ஒன்று இருப்பதே 'அந்நியன்' படம் வந்த பிறகு தானே

"கன்னிகாதானங்கள் செய்தல், 100 முறை கோ தானம் செய்தல், கயா சிரார்த்தம் செய்தல் ஆகியவற்றால் வரும் புண்ணியங்களை விட இப்புராணத்தை படித்தாலும், கேட்டாலும் அதிக புண்ணியமுண்டாகும்" என்று இதில் பகவானே ஒரு இடத்தில் சொல்கிறார்.

மொத்த மனித குலம் மேம்படவேண்டுமென உயரிய நோக்கில் திருமாலால் அருளப்பட்ட இதனை குறிப்பிட்ட ஒரு சாரர் மட்டுமே படித்து பயனுற்றுகொண்டிருப்பது சரியா.... என்ற கேள்வியின் விளைவு தான் இத்தொடர் பதிவுக்கான மூலம்

இந்த புராணத்தில் சில நுண்ணிய விவாத, விதண்டாவாத விஷயங்கள் பல உண்டு. சில விஷயங்களுக்கு விளக்கம் கொடுக்க முடியும். சில விஷயங்களுக்கு நம்மால், மற்றவர்களால் ஒத்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு விளக்கம் கொடுக்க முடியாது....’ என்பது, என் நலனில் அக்கறைகொண்டவரிடம் இதுகுறித்து கேட்ட போது சொன்ன வார்த்தைகள் இது.

உண்மை தான். ஆனால், ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள் அப்படியே தான் ஏற்றுக்கொள்வார்கள். விதண்டாவாதம் செய்யவேண்டும் என்று முடிவெடுத்து விட்டவர்களானால், விவாதித்துக்கொண்டு தான் இருப்பார்கள்.

ஆகவே, நண்பர்களே! இப்பதிவினை நான் துவங்கும் முன் - உங்களிடம் சில வார்த்தைகள்... ஒரு வேண்டுகோளும் கூட....! ஆன்மீக நாட்டமுள்ளவர்கள் மற்றும் சொர்க்கம் நரகம் என்பதில் நம்பிக்கையுள்ளவர்கள் மட்டும் இதனை தொடருமாறு அன்புடன்  கேட்டுக்கொள்கிறேன்.

பொதுவாக அரசியலும், ஆன்மீகமும் அன்றிலிருந்து சர்ச்சைக்கு உரிய விஷயமாகவே தான் இருந்து வருகிறது. அரசியல், நாட்டில் மட்டுமல்ல ஆன்மீகத்திலும் மலிந்து தான் கிடக்கிறது என்பது எனது தாழ்மையான கருத்து.

விவாதம் என்ற பெயரில் எழும்  வீண் விதண்டாவாதங்களை   தவிர்த்துவிடலாமே. யாரையும் புண்படுத்தாத வகையில் பின்னூட்டமாகும் நியாயமான சந்தேகங்களுக்கு தெரிந்தவர்கள் விளக்கம் கொடுக்கட்டும்.

என்னுடைய இந்த முயற்சியில் நீங்களும் ஒத்துழைப்பு கொடுத்து  பங்கெடுத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,


மேலும் இதனை பற்றி அறிந்து கொள்ள............... விரைவில் கருடபுராணம் தொடரவிருக்கிறது. தொடர்ந்து இணைந்திருங்கள்.

1 comment: