மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

Thursday 8 January 2015

10. பாப புண்ணியங்களை ஆராய்ந்து சொல்லும் பன்னிரு சிரவணர்கள்

சூதமாமுனிவர், சௌகாதி முனிவர்களை நோக்கிக் கூறலானார். வேத வடிவிலான பெரிய திருவடி பரம காருண்யரான திருமாலின் திருவடிகளைத் தொழுது, பெருமாளே! தேவரீர்! முன்பு கூறியருளிய அச்சிரவணர்கள் பன்னிருவர்களும் யாவர்? அவர்கள் யாருடைய புதல்வர்கள்? வைவஸ் வத நகரத்தில் அவர்கள் இருப்பதற்கு காரணம் என்ன? மனிதர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அச்சிரவணர்கள் எவ்வாறு அறிவார்கள்? இவற்றையெல்லாம் அடியேனுக்கு நவின்றருள வேண்டுகிறேன்.” என்று வேண்டினான். அதற்கு திருமால் மகிழ்ந்து கூறலானார்.

புள்ளரசே! கேட்பாயாக! ஊழி காலத்தில் தன்னந் தனியனான ஸ்ரீ மகா விஷ்ணுவானவர் அயனாராதி தேவரோடு யாவரும் யாவும் தன்னுள்ளே ஒடுக்கிக் கொண்டு நெடும்புணலில் பள்ளி கொண்டிருந்தார்.

அப்போது மகா விஷ்ணுவின் உத்திகமலத்தில் நான்முகனாகிய பிரமன் தோன்றி, ஸ்ரீ ஹரியைக் குறித்து நெடுங்காலம் மாதவம் புரிந்து வேதங்களையும் படைத்தருளினார். அவ்வாறு படித்தவுடனேயே உருத்திரன் முதலிய தேவர்கள் எல்லாரும் அவரவர் தொழில்களைச் செய்யத் துவங்கினார்கள்.

எல்லோரையும் விட ஆற்றல் மிக்க யமதர்மராஜனும் ஜைமினி என்ற நகரத்தை அடைந்து சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஜீவர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிய வேண்டும் என்று ஆராய்ந்தார். அறிய தொடங்கிய அவனுக்கு சேதனர்கள் செய்யும் பாப புண்ணியங்களை அறிந்து கொள்ள முடியவில்லை.

“பல காலம் முயன்றும் அவனால் அந்தச் செயலில் வெற்றியடைய முடியவில்லை. எனவே யமதர்மராஜன் மனம் வருந்தி நான்முகனைக் கண்டு வணங்கி, ‘சதுர்முகனே! மஹா தேவனே! அடியேன் ஜீவர்களின் பாவ புண்ணியங்களை நீண்ட நாட்கள் ஆராய்ந்தும் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. அறிந்தால் அல்லவோ பாவிகளை தண்டிக்கவும், புண்ணியசாலிகளை இரட்சிக்கவும் முடியும். ஆகையால் அவற்றை உணர்ந்து, அறிந்து தக்கவை செய்யவும் எனக்கு அருள் புரிய வேண்டும்.’ என்று பிரார்த்தித்தார்.
                   
“அதைக் கேட்டதும் நான்முகன், ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்தெறிந்து, நீண்ட கண்களை உடையவர்களும் மிக்க மேனியசகுடயவர்களும்  மனக்கண்ணால் யாவற்றையும் அறிந்து கொள்ளக் கூடியவர்களான பன்னிரண்டு புதல்வர்களைப் படைத்து,


“யமதர்மனைப் பார்த்து, ‘தர்மனே! உலகத்தில் பிறந்த ஜீவர்கள் அனைவரும் நினைப்பதையும் பேசுவதையும் செயல்புரிவதையும் உணர்ந்தறிய வல்லவர்கள். இவர்கள் ஜீவர்கள் செய்வதை எல்லாம் அறிந்து உனக்கு அறிவிப்பார்கள். நீ பாப புண்ணியங்களை அறிந்து சிஷையும்  ரகைஷயும்  செய்வாயாக!’ என்று சொல்லி, அப்பன்னிருவரையும் யமதர்மனுடன் செல்லும்படிப் பணிக்க, 

“காலனும் பிரமனை வணங்கி அந்தப் பன்னிரு சிரவணர்களோடு தென்புலத்தை அடைந்து, சேதனர்களுடைய புண்ணியங்களையும், பாவங்களையும் அறிந்து அவற்றுக்குத் தக்கவாறு தண்டித்தும் காத்தும் வருவானாயின்.

“பக்ஷி ராஜனே! பூவுலகில் வாழ்வின் இறுதிக் காலம் முடிந்தவுடனே, வாயு வடிவனான ஜீவனை யம கிங்கர்கள், யமபுரிக்கு இழுத்துச்  செல்வார்கள். அறம்,பொருள்,இன்பம்,வீடு என்ற நான்கு வகை புருஷார்த்தங்களில் தர்மஞ் செய்த உத்தமர்கள் யாவரும் தர்ம மார்க்கமாகவே வைவஸ்வத நகரம் என்னும் யமபுரிக்குச் செல்வார்கள். 

“மோட்சத்தில் இச்சை கொண்டு வேத சாஸ்திர புராணங்களை அறிந்து தெய்வ பக்தி செய்பவர்கள் தேவி விமானம் ஏறி தேவருலகை அடைவார்கள். பாவிகள் கால்களால் நடந்தே செல்வார்கள். கடுமையான, கொடுமையான கரடுமுரடான பாதையை கடந்து செல்ல வேண்டும்.

“வாழுங்காலத்தில் ஜீவன் சிரவணரைப் பூஜித்தவனாகயிருந்தால், ஜீவனின் பாவங்களை மறைத்து புண்ணியங்களை மட்டுமே யமதர்ம தேவனிடம் சொல்வார்கள்.

“பன்னிரண்டு கலசங்களில் தண்ணீர் நிறைந்து அன்னம் பெய்து அக்கலசங்களை அந்தந்தச் சிரவணரைக் குறித்து தானதர்மங்கள் செய்தால் ஜீவனுக்கு யமலோகத்தில் சகலவிதமான நன்மைகளையும் செய்வார்கள்.

“கருடா! பன்னிரண்டு சிரவணர்களின் தோற்றம் முதலியவற்றைச் சொல்லும் இந்த புண்ணிய சரிதத்தை பக்தியோடு கேட்டவர்கள் பாபம் நீங்கிய புனிதராவார்கள் என்று கூறியருளினார்.

நாம் சிரத்தையுடன் செய்ய வேண்டிய காரியம்.

 றந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியமே சிராத்தம். சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், ஜலம், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகிய கோத்திர தாயாதிகளுக்கு ஒவ்வொருவரும் செய்யவேண்டிய மிக முக்கிய கடமையாகும் இது. இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்!


சிராத்தம், தர்ப்பணம் செய்கிற நாட்களில், வீட்டு வாசலில் கோலம் இடக்கூடாது. பூஜையறையில் தீபம் ஏற்றக்கூடாது. அதேபோல், சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்யும் முன்பு ஆண்களும் சரி, பெண்களும் சரி, நெற்றிக்கு இட்டுக்கொள்ளக் கூடாது. இவை, இறைவனை வழிபட நாம் செய்யும் காரியங்கள். பித்ருக்கள் வரும் நேரத்தில், இறை தொடர்புடைய இந்தக் காரியங்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். காரணம், தெய்வத்தை வழிபடும் வேளையில், பித்ருக்கள் வரப் பயப்படுவார்கள் என்கிறது சாஸ்திரம்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில்தான் தர்ப்பணம் செய்ய வேண்டும். நம் முன்னோர் எந்தத் திதியில் இறந்தார்களோ, அந்தத் திதி மற்றும் அந்த பட்சம், அந்த மாதம் ஆகியவற்றில் சிராத்தம் செய்ய வேண்டும். இறந்த நாளில் செய்ய வேண்டிய சிராத்தத்தை ஒரு சிலர், இறந்த நட்சத்திரத்தில் செய்கிறார்கள். அதைத் தவிர்ப்பது உத்தமம். ஏனென்றால், அன்றைய தினம் திதி மாறி வர வாய்ப்பு உள்ளது. அதனால், இறந்த திதியில் சிராத்தம் செய்வதே சிறப்பு!

மனிதர்கள் தாம் வாழும் காலத்தில், தான தருமங்கள் செய்து வருதல் வேண்டும். நம்மைப் பெற்ற தாய், தகப்பன் உயிருடன் இருக்கும் காலத்தில், அவர்களின் மனம் நோகாமல் நடந்து கொள்வதே மிகப் பெரிய தர்மம் ஆகும்.

இறந்த பின்பு செய்கின்ற தானத்தைவிட, இருக்கும்போது அவர்களுக்கு மூன்று வேளையும் நல்ல ஆகாரம் கொடுப்பதே மிகப் பெரிய தர்மம் என்கிறது கருடபுராணம்.

பாபம் என்றால் என்ன, அது யாரைச் சேரும் என்பதைப் பற்றி நமது வேதங்களும், உபநிஷத்துகளும் விரிவாகச் சொல்லியிருக்கின்றன. பொய் பேசுதல், பிறர் பொருளை அபகரித்தல், அல்லது அபகரிக்க நினைத்தல் போன்றவை தீய காரியங்களாகும். இவை எல்லாமே பாபம் என்று கருடபுராணம் சொல்கிறது.
சிராத்தம், தர்ப்பணம், பித்ரு காரியம், படையல் என்றெல்லாம் பல்வேறு வார்த்தைகள் புழக்கத்தில் இருந்தாலும், அவை அனைத்தும் ஒன்றையே குறிப்பன ஆகும். நதிகள் பல இடங்களில் உற்பத்தியாகி, பல ஊர்களின் வழியாக வரும்போது, அவை ஆறு என்று பெயர் பெற்று சமுத்திரத்தில் கலக்கின்றன.

அதுபோல், நாம் செய்கிற சிராத்தம், ஒவ்வொரு வருடமும் நம் முன்னோர் இறந்த திதியில் செய்யப்படுவது. தர்ப்பணம் என்பது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யப்படுகிறது. படையல் என்பது வருடத்துக்கு ஒருமுறை செய்யப்படுவது.

ஆனால் இவை அனைத்துமே இறந்த முன்னோர்களுக்காகச் செய்யப்படுகிற சடங்குகள். இவை நம் முன்னோர்களைச் சென்றடைந்து, அவர்களின் ஆத்மாக்களைக் குளிர்வித்து, நமக்கு அவர்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும் என்பது சத்திய வாக்கு.

நவீன உலகம், விஞ்ஞான யுகம், கணினி யுகம் என்று காலம் வேகமாக மாறிவிட்டது. 'என் வாழ்க்கையே இயந்திரமயமாகிவிட்டது. தர்ப்பணம் செய்யவே நேரம் இல்லைஎன்று அங்கலாய்க்கிறார்கள் பலர். மாதத்தில் ஒரே ஒருமுறை வருகிற அமாவாசைக்கே இப்படிச் சொல்கிறார்கள். ஆனால், வருடத்துக்கு 96 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறது வேதம். ஆகவே, எந்தச் சாக்குப் போக்கும் சொல்லாமல், தட்டிக் கழிக்காமல் முன்னோரை உரிய காலத்தில் வழிபடுவது நமக்கு நன்மை பயக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

இவை அனைத்தையும் செய்ய முடியவில்லை என்றாலும், ஆடி மாத அமாவாசை தர்ப்பணமும், தை மாத அமாவாசை தர்ப்பணமும் அவசியம் செய்ய வேண்டும். ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டிய சிராத்தம் விட்டுப்போனால் (தீட்டு ஏற்படுவதால்) மஹாளயபட்சம் அன்று தர்ப்பணம் செய்ய வேண்டும்.

இந்தப் புனிதமான தர்ப்பணங்களை உத்தராயன, தட்சிணாயன காலங்களில் செய்யாமல் இருந்தால், குழந்தையின்மை, கருக்கலைவு, குடும்பத் தகராறு, ஆரோக்கியக் குறைபாடு, அகால மரணம், திருமணத் தடை, தீய பழக்கங்கள், ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு, மூளை வளர்ச்சிக் குறைவுள்ள குழந்தைப் பிறப்பு போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெற்று, நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம். இவை பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்ர தோஷங்களாகத் திகழ்கின்றன. இவை முறையற்ற வாழ்க்கை, தேவையற்ற கோபம், மன உளைச்சல், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, உடல்வலி போன்றவற்றை உருவாக்கி, நிம்மதியற்ற வாழ்க்கையைத் தந்துவிடும்.

ஆத்மகாரகனாகிய சூரியனும், மனோகார கனாகிய சந்திரனும் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இணைவார்கள். இதையே அமாவாசை என்கிறோம். சூரியன் என்பதை பித்ருகாரகன் என்றும், சந்திரன் என்பதை மாத்ருகாரகன் என்றும் சொல்கிறது ஜோதிடம். ஆகவே சூரியன், சந்திரன் இணைகிற அமாவாசையில், இறந்த தாய், தந்தை மற்றும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆராதிப்பது சிறப்பு என்கிறது சாஸ்திரம். 

கிட்டத்தட்ட, நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.

9. ஜீவன் செல்லும் பாதையில் பரிதவித்தல்

“யமதூதர்களால் பாசக் கையிற்றால் கட்டுண்டும், அவர்களிடம் உதையுண்டும் செல்லும் ஜீவன் தன் மனைவி மக்களோடு வாழ்ந்த காலத்தில் அடைந்திருந்த இன்பத்தை நினைத்து,  துன்பமடைந்து பசியாலும் தாகத்தாலும் மெலிந்து சோர்வுற்று இளைத்து, ஈன ஸ்வரத்தோடு ‘ஐயகோ! நம்மோடு வாழ்ந்த உற்றார் உறவினர் எங்கே? இந்த யம படர்களிடம் சித்ரவதைப்படும்படி விட்டு விட்டார்களே! நான் சேர்த்த பொருள்கள் எங்கே? ஊரையடித்து உலையில் போட்டோமே, உழைத்தவன் உழைப்பை உறிஞ்சி நயமாக வஞ்சித்து வாழ்ந்தோமே!’ என்று அலறித் துடிப்பான்.

“கருடா! தீய தொழில் புரிந்தோர் அடையும் கதியைப் பார். பிறகு அந்த சேதனன் சிறிது தூரம் அனாதையாக காற்றின் வழியிலும், புலிகள் நிறைந்த வழியிலும் இழுத்துச் சென்று ஓரிடத்தில் தங்கி, இறந்த இருபத்தெட்டாம் நாளில் பூமியில் புதல்வனால் செய்யப்படும் ஊனமாகிய சிரார்த்த பிண்டத்தைப் புசித்து, முப்பதாம் நாளன்று யாமியம் என்று நகரத்தைச் சேர்வான்.

“அங்கு பிரேதக் கூட்டங்கள் கூட்டம் கூட்டமாக கூடியிருக்கும். புண்ணிய பத்திரை என்ற நதியும் வடவிருட்சமும் அங்கு உள்ளன. பிறகு அவ்யாமியம் என்ற நகரத்தில் சிறிது காலம் தங்கியிருந்து, இரண்டாவது மாசிக பிண்டத்தை அருந்தி, இரவும் பகலும் தூதர்களால் இழுத்துச் செல்லப்பட்டு யாருக்கும் பயத்தை ஏற்படுத்தும் ஆரண்யத்தின் ஊடே சென்று வழிநடக்கும் வேதனையோடு ஓவென்று அழுது தூதர்கள் செய்யும் கொடுமையால் வருத்தித் துன்புறச் செல்லும் வழியில் திரைபக்ஷிக மாசிக பிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற அரசனுக்குரிய சௌரி என்ற நகரத்தைச் சார்ந்து அங்கு மூன்றாம் மாசிக பிண்டத்தை புசித்து அப்பால் சென்று, வழியிலே பொறுக்க முடியாத குளிரினால் மிகவும் வருந்துவான்.

“பிறகு குருரபுரம் என்ற பட்டணத்தை அடைந்து அங்கு ஐந்தாவது மாசிக பிண்டத்தையுண்டு, அப்பால் நடந்து கிரௌஞ்சம் என்ற ஊரையடைந்து, அந்த ஊரில் ஆறாவது மாசிக பிண்டத்தை உண்டு, அங்கு வாழ்ந்ததை நினைத்து வாய்விட்டு புலம்புவான்.

“அப்போது யமபடர்கள் சினங்கொண்டு அவ்வாயிலே புடைப்பார்கள். வருந்தி செல்லும் வழியில் அஞ்சத்தக்க ரூபமுடைய படகோட்டிகள் பதினாறாயிரம் பேர்கள் கூட்டமாக அவன் முன்பு ஓடிவந்து தீப்பொறி பறக்க விழித்து, ‘ஏ ஜீவனே! எப்போதாவது வைதரணி சோதானம் என்ற தானத்தைச் செய்திருந்தாயானால் இனி நீ கடந்து செல்ல வேண்டிய வைதரணி நதியை, நீ இனிதாகக் கடக்க நாங்கள் உனக்கு உதவி செய்வோம். இல்லையெனில் அந்த நதியிலே உன்னைத் தள்ளிப் பாதாளம் வரையிலும் அழுத்தித் துன்பப்படுதுவோம். அந்த நதியிலே தண்ணீரே இராது. இரத்தமும், சீழும், சிறுநீரும் மலங்கலுமே நிறைந்து துஷ்ட ஜந்துக்களிலும் கோடி ஜந்துக்கள் வாழும் இடமாகும். பசு தானத்தை நீ செய்திராவிட்டால், வைதரணி நதியிலே, நீண்ட நெடுங்காலம் மூழ்கித் தவிக்க வேண்டும்.’ என்று ஓடக்காரர்கள் கூறுவார்கள்.

“பூமியில் வாழ்ந்த காலத்தில் வைதரணி "கோதானம்" என்ற தானத்தை செய்யாமல் போனாலும் அவன் இறந்த பிறகு அவன் குலத்தில் பிறந்த அவன் மகனாவது அவனைக் குறித்துச் செய்ய வேண்டும். செய்திருந்தால் ஜீவன் அந்த நதியைக் கடந்து யமனுக்கு இளையோனாகிய விசித்திரன் என்பவனது பட்டினத்தைச் சார்ந்து ஊனஷானி மாசிகப் பிண்டகத்தை உண்ணும் போது, சில பிசாசுகள் அவன் முன்பு பயங்கரத் தோற்றத்துடன் தோன்றி, அந்த ஜீவனைப் பார்த்து, ‘அட மூடனே! நீ யாருக்கும் தானம் செய்யாதவனாக இருந்தால், உன் பசிக்கென்று உனக்காக மாதந் தவறாமல் மாசிக சிரார்த்ததைச் செய்து, உன் கைக்கு கிடைத்து, நீ ஆவலோடும், பசியோடும் புசிக்க துடிக்கும் அன்னத்தை, பேய் பிசாசுகள் புடிங்கிச் சென்று விடும்.’

“பறவைகளின் அரசே! ஒரு பொருளுமே இல்லாத வறிஞனாகப் பூவுலகில் வாழ்ந்தாலும் கூட, தன்னை யாசித்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல்  தன்னால் இயன்ற சிறு உதவியாவது செய்ய வேண்டும்.

“அப்படி செய்யாதவர்கள், இறந்த பிறகு தூதர்களால் இழுத்துவரப்பட்ட ஜீவன், புத்திரன் அவன் பொருட்டு கொடுக்கும் மாசிக பிண்டம் அவனுக்கு சேராமல் பிசாசுகளின் கரங்களிலேதான் சேரும். ‘ஐயகோ! பசியால் என்னை நாடி வந்தவர்களுக்கு கொடுக்காத பாவத்தின் பயனோ இது? வயறு பசிக்க, நாக்கு வறல நான் தவிக்கும் தவிப்பை காண ஒருவருமில்லையே! பூமியில் பொருள் மிகுந்தவனாக வாழ்ந்த என்னை நவ்விய பொது, அவனுக்கு அரை வயிற்றுப் பசிதீரவாவது அன்னம் கொடுத்தேனா! சாக்காடு என்று ஒன்று நிச்சயமாக இருக்கிறது என்று புராணங்களில் படித்ததை நம்பினேனா! "செத்த பிறகு என்ன கதி வந்தால் என்ன, இருக்கும்போது நமக்கு ஏன் கவலை!" என்று இருமாந்திருந்தேனே! இப்போது இங்கு நான் படும் தொல்லையை யாரிடம் சொல்வேன். என்னவென்று சொல்வேன்!’ என்று துக்கப்படுவான்.

“அப்போது அவன் அருகே இருக்கும் தூதர்கள் அவனைப் பார்த்து' முழு மூடனே! பூமியில் மனிதனாகப் பிறக்கும் வாய்ப்பைப் பெற்று, மானிட ஜென்மம் கிடைப்பது அரிது.

“அவன் இன்மைக்கும் மறுமைக்கும் தருமங்களையும் ஏராளமாகத் தான் வாழ்கின்ற காலமெல்லாம் செய்து புண்ணியங்களை சேர்த்திருக்கலாமே, அதை விட்டு மறுமைக்கு பயன் தராத பொருளைச் சேர்ப்பதிலேயே காலங்கழித்த மானிடனை என்னவென்று சொல்வது? பூமியில் வாழ்கின்ற காலத்திலேயே சேர்க்கிற நல்வினைத் தீவினைப் பயன்களை அடையாமல் உடலை இழந்து ஆவியான பின்பு எதையுமே செய்ய இயலாது.

“மண்ணுலகத்திலே ஆடம்பரமாக, அகம்பாவமாக, ஆனந்தமாகப் பெரியோரை மதிக்காமல் செல்வதும், உழைப்பாளியை உதைக்கச் செய்வதும் மனிதர்கள் செய்யும் புண்ணிய பாவங்களின் பயனேயாகும் என்பதை அறிவாயாக. இறந்தபின் நினைத்து என்ன பயன்?.

“கருடனே! உதக கும்பதானம் என்ற ஒருவகைத் தானமாக செய்யப்பட்டதாயின் ஜீவன், அந்த உதக கும்பத்திலுள்ள நீரைப் பருகியாவது சிறிதளவாவது தாகவிடாய் தீர்ந்து ஏழாம் மாதத்தில் அவ்விடத்தை விட்டு மீண்டும் நடந்து செல்வான்.

“இதுவரை பாதி தொலைவைக் கடந்தவனாய் அம்மாதத்தில் அவனுக்குரியவர் பூவுலகில் அன்னதானம் செய்ய வேண்டும். பிறகு அந்த ஜீவன் “பக்குவபதம்” என்ற பட்டினத்தைச் சார்ந்து எட்டாவது மாசிக பிண்டத்தை உண்டு, அங்கிருந்து நடந்து ‘துக்கதம்’ ஊரை அடைந்து உண்பான்.

“விருஷோற்சனம் செய்யாமையால் அநேகம் ஜீவர்கள் பிரேத ஜென்மத்தோடு அப்பட்டணத்தில் கூட்டம், கூட்டமாக கூடி, ஒ ஒ வென்று ஓயாமல் ஓலமிட்டுக் கதறிக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு கதறும் அச்சீவர்களை பாது அங்குவந்த ஜீவனும் கத்தி கதறிவிட்டு, அப்பால் நடந்து "அதத்தம்" என்ற ஊரையடைந்து பதினொன்றாம் மாசிக பிண்டத்தை உண்டு, அங்கிருந்து "சீதாப்ரம்" என்ற நரகத்தை அடைந்து அங்கு சீதத்தால் வருந்தி, பன்னிரெண்டாவது மாதத்து வருஷாப்தியப் பிண்டத்தை உண்டு, அங்கிருந்து புறப்பட்டு நான்கு திசைகளையும் பார்த்து ஈனக் குரலில், ‘யமகிங்கர்களே! என் உற்றார் உறவினர்களை காணோமே! ஏழையேன் என் செய்வேன்...’ என்று அழுவான்.

“அப்போது எமதூதர்கள் அந்த சீவனை நோக்கி, ‘முழுமூடனே! உன் மனைவி மக்கள் இன்னமுமாயிருப்பார்கள்? அவர்கள் மேல் உனக்குள்ள ஆசைகள் இன்னும் நீங்கவில்லையா? நீ செய்த புண்ணிய பாவங்களின் பயன்களைத்தான் இங்கு நீ காண முடியும்’ என்று அறைவார்கள். ‘ஐயோ! முன்னமே நீங்கள் சொன்னது மறந்து ஏதேதோ பிதற்றுகிறேன்...’ என்று தனக்குள் தானே மனம் புழுங்கி நடந்து வைவஸ்வத பட்டினம் என்ற நகரத்தைச் சேர்வதற்கு முன்பே ஊனற்பதிக பிண்டத்தை அருந்தி யமபுரி பட்டினமாகிய வைவஸ்வத பட்டினத்தை அடைவான்.


“யமபுரி நூற்றி நாற்பத்து நான்கு காதவழி அகலமுள்ளதால் காந்தர்வ அப்சரசுகளோடு கூடியதாய் என்பது நான்காயிரம் பிராணிகள் வாழுமிடமாகயிருக்கும் ஜீவன்கள் செய்யும் பாப புண்ணியங்கள் அறிந்து, எமதர்மனுக்குத் தெரிவிக்கும் பன்னிரண்டு சிரவணர்கள் என்பவர்கள் அந்த நகரில் இருப்பார்கள். ஜீவர்கள் அனைவரும் அந்தப் பன்னிரு சிரவணர்களையும் ஆராதனை செய்து ஆராதித்தால், ஜீவன் செய்த பாபங்களை யெல்லாம் மறைத்து புண்ணியங்களை மட்டும் சிரவணர்கள் யமதர்மராஜனுக்கு எடுத்துரைப்பார்கள் என்று திருமால் கூறியருளினார். 

Monday 5 January 2015

இறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்???




இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண்டுமென்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டுபோய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள். ஏனெனில், ஒரு கட்டடத்துக்குள் இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. தலை வடக்கு நோக்கி வைக்கப்படும்போது காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடலைவிட்டு எளிதாகப் பிரியும்.

மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுவதில்லை. எனவே, அந்த உயிர் உடலை சுற்றிக் ஓர் உயிர்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால், உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும்போது அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, அந்த உடலைச் சுற்றிக்கொண்டு இருக்கும் பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுகிறது.
மற்ற சூழ்நிலைகளில் உயிரானது(பிராண சக்தியானது) தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக்கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்படுத்தும். இது இறந்துபோன மனிதருக்கும் நல்லதல்ல, வாழ்கிறவர்களுக்கும் நல்லதல்ல.

இன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின் இரண்டு கால் கட்டை விரல்களும் ஒன்றாகக் கட்டப்படுவது. பொதுவாகவே மரணம் நிகழ்கிறபோது கால்கள் அகலமாகத் திறந்துகொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன பிராண சக்தியானது அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உடலுக்கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல.

எனவே, கால் கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது. யோகக் கிரியைகள் செய்வதற்காக நீங்கள் கால்கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத் துவாரம் இயல்பாகவே மூடிக்கொள்ளும். இதையேதான் இறந்தவர்களுக்கும் செய்கிறார்கள். எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின்(பிராண சக்தி) முயற்சி இப்போது பலிக்காது. மூலாதாரம் திறந்திருக்கிறபோது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில சக்திகளும் முயலக்கூடும். அது எதிர்மறையான காந்த அலைகளை உருவாக்கும். மாந்திரீகப் பயிற்சி மேற்கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்தக்கூடும்.

அப்படி அந்த உடல் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன்புறுத்துவதாக இருக்கும்.
அதனால்தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன.