மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

Thursday 19 November 2015

மரணம் இப்படித்தான் இருக்குமா - IV

ரோப்பாவில் தென்கிழக்கு தீபகற்கபகுதியில் உள்ள வரலாற்றுப் பெருமைமிக்க கிரேக்க நாட்டிலும் இதே போன்ற ஒரு கதை உள்ளது. அந்தக் கதையில் டியூக்கேளியன் என்று ஒரு மனிதன் இருந்ததாகவும் அவனுக்கு பிர்ரஹா என்ற மனைவியின் மூலம் ஹெலின் என்ற மகன் இருந்ததாகவும் இந்த மகன் காலத்தில் உலகெங்கும் தீமை கோரமாகத் தலைவிரித்து ஆடியதாகவும் இதனால் கிரேக்கர்களின் பெரிய தெய்வம் கோபம் கொண்டு பூமியில் பெரும் மழையை
ஏற்படுத்தியதாகவும் இதனால் வெள்ளம் நாலாபுறமும் சூழ்ந்து உயிர்களைக் கபளிகரம் செய்ததாகவும் ஹெலினும் அவனது இளம் மனைவியும் படகில் தப்பி பூமியின் தெற்குப் பகுதிக்குச் சென்று மனித உற்பத்தியை ஆரம்பித்தாகவும் கிரேக்கக் கதை கூறுகிறது.
கிறிஸ்தவ வேதமான விவிலியத்திலும் மகாபிரளத்தைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகின்றது என்றும் அவன் இருதயத்தின் நினைவுகளில் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் கர்த்தர் கண்டு தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்திற்கு விசனமாய் இருந்தது.

அப்பொழுது கர்த்தர் நான் சிருஷ்டித்த மனுஷனை பூமியின் மேல் வைக்காமல் மனுஷன் முதற்கொண்டு மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கின்றனவைகளை நிக்கிரஹம் பண்ணுவேன். நான் அவர்களை உண்டாக்கினது. எனக்கு மனஸ்தாபமாய் இருக்கிறது என்றார்.

அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி மாமிசமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது. அவர்களாவே பூமி கொடுமையினால் நிறைந்தது. நான் அவர்களை பூமியோடு கூட அழித்துப் போடுவேன்.

நீ கோப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உருவாக்கு. அந்தப் பேழையிலே அறைகளை உண்டு பண்ணி அதை உள்ளும் புறமும் பிசின்களால் பூசு என்றார்.
கர்த்தரின் கடடளைபடி நோவா கோப்பேர் மரத்தால் பேழையைக் கட்டி முடித்து அதற்கு உள்ளும் புறமும் பிசின் பூசினார். அந்தப் பேழையின் அளவு கர்த்தரின் உத்தரவுபடி 300 அடி நீளமும் 50 அடி அகலமும் 30 அடி உயரமும் உள்ளதாக இருந்தது.

பேழை செய்யப்பட்ட பின்பு அதனுள் சகல வித மாமிசமான ஜீவன்களில் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடி வீதமும் நோவாவும் அவர் குடும்பத்தினரும் பேழைக்குள் பிரவேசித்தனர் சகல ஜீவன்களிலும் மனிதர்களிலுமாக பேழைக்குள் ஏறிக்கொண்ட ஏழு நாட்களுக்குப் பிறகு நோவாவின் 600வது வயதில் இரண்டாம் மாசத்தில் 17ம் தேதியில் மகா பாதாளத்தின் ஊற்றுக் கண்களும் பிளந்தன. வானத்தின் மதகுகளும் திறவுண்டன.

இவ்வாறாக ஜலப்பிரளயம் 40 நாள் பூமியின் மேல் உண்டானபோதும் தண்ணீர் பெருகி பேழையைக் கிளம்பப் பண்ணியது. அது பூமிக்கு மேல் மிதந்தது. ஜலம் பெரும் வெள்ளமாகி பூமியெங்கும் மூழ்கலாயின. பின்னர் 7ம் மாதம் 17ம் தேதியில் பேழை ஹரராத் என்னும் மலையின் மேல் தங்கிற்று. 10ம் மாதம் முதல் ஜலம் வடியத் தொடங்கியது. மலைச்சிகரங்களும் மலைமேல் இருந்த மரங்களும் தெரிய ஆரம்பித்தன. (பைபிள் ஆதியாகமம் 6 முதல் 8ம் அதிகாரம் 4.5 வசனம் வரை.
கடல்கோள் பற்றி விவிலியம் இவ்வாறு விவரிக்க திருக்குரானும் இதைப் பற்றி விஸ்தாரமாகவே பேசுகிறது. நிச்சயாக நாம் நூகுவை அவர்களுடைய ஜனங்களிடம் (நம்முடைய) தூதராக அனுப்பி வைத்து அவரை நோக்கி உம்முடைய ஜனங்களுக்கு துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன்னதாகவே அவர்களுக்கு (அதனை பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் என்று கட்டளை இட்டோம்.

நமது கட்டளைப்படி நூகு அந்த ஜனங்களை நோக்கி எனது ஜனங்களே நிச்சசயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். அவ்வாறு நீங்கள் வழிபாடுகளை இசைந்து நடத்துங்கள். அவ்வாறு நீங்கள் நடப்பீர்களானால் இறைவன் உங்கள் குற்றங்களை மன்னித்துக் குறிப்பிட்ட காலம் வரை உங்களை வாழ அனுமதிப்பான்.
நிச்சயமாக (வேதனைக்குக் குறிப்படப்படும்) இறைவனின் காலக்கெடு வரும் பட்சம் அது ஒரு சிறிதும் பிந்தாது. இதனை நீங்கள் அறிய வேண்டாமா? எனக் கூறினார்.

அம்மக்கள் (தூதரை விளித்து) நூஹே நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கித்தீர். அதுவும் அதிகமாகவே தர்க்கித்துவிட்டீர். நீர் உண்மை சொல்பவராக இருந்தால் (வீண்தர்க்கத்தை விட்டொழித்து) நீர் அச்சுறுத்தும் அந்த வேதனையை நம்மிடம் கொண்டு வாரும்.

தூதராகிய நூஹீவுக்கு மீண்டும் வந்த இறை அறிவிப்பின் தொடர் இவ்வாறு கூறிச் செல்கிறது.

(ஓ நூஹே) நாம் அறிவக்குமாறு நம் கண் முன்பாகவே ஒரு மரக்கலத்தை நீர் செய்யும். அக்கிரமக்காரர்களைப் பற்றி (இனிமேலும்) நீர் என்னுடன் பேசாதீர். நிச்சயமாக அவர்கள் பெரும் வெள்ளதில் மூழ்கடிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
அவர் மரக்கலத்தைச் செய்து கொண்டிருந்த சமயத்தில் அம்மக்களின் தலைவர்கள் அதன் சமீபமாகச் சென்ற போதெல்லாம் அவரைப் பரிகசித்தனர். அதற்கு அவர் நீங்கள் எங்களை (இப்பொழுது) பரிகசித்தால் நிச்சயமாக நீங்கள் நகைப்பது போலவே (விரைவில்) நாங்களும் உங்களைப் பார்த்துப் பரிகசிப்போம் எனக் கூறினார். ஆகவே அவர் தன் இறைவனை நோக்கி நிச்சயமாக நான் இவர்களிடம் தோற்றவிட்டேன். எனக்கு உதவி செய்வாயாக என்று பிரார்த்தனை செய்தார். ஆதலால் வானத்தின் வாயில்களைத் திறந்துவிட்டு தாரை தாரையாக மழை கொட்டும்படிச் செய்தோம்.

அன்றி பூமியின் ஊற்றுக்கண்களையும் (பீறிட்டு) பாய்ந்து ஒடச் செய்தோம். ஆகவே குறிபிட்ட ஓரளவுக்கு இரு ஜலங்களும் கலந்தன. நாம் அவரையும் அவரை ஏற்றுக்கொண்டவர்களையும் மரக்கலத்தின் மீது சுமந்து கொண்டோம். அது நம் கண் முன்னே பிரளயத்தின் மிதந்து சென்றது.

மேலும் அந்தப் பிரளயத்தினால் பூமியில் எத்தனை விதமான அழிவுகள் கொடூரமான முறையில் விவரிக்க முடியாத பயங்கரமாக இருந்தது என்பதை குர்ஆனின் இன்னொரு வசனம் பறைசாற்றுகிறது. அலைகள் சீறிவரும் போது அதிலிருந்து நெருப்புப் பிழம்பு வந்ததாகவும் ஒவ்வொரு நீர்த்திவலையும் கருங்குன்றுகள் போல் பூமியைத் தாக்கியதாகவும் இதனால் உயினங்கள் ஓலமிட்டு மரணவாயிலில் அடுக்கடுக்காக விழுந்ததாகவும் மலைகள் எல்லாம் எரிமலை சீற்றத்தால் வெடித்துச் சிதறுவது போல் தூள் தூளாக நொறுங்கி கடலில் கலந்ததாகவும் குர்ஆன் வர்ணனை செய்கிறது.
குர்ஆன் பைபிள் போலவே சிலப்பதிகாரமும் இந்த மகா ஊழிக் காலத்தை

பஃறுளியாற்றுடன்
பன்மலையடுக்கத்துக்
குமரிக்கோடும்
கொடுங்கடல் கொள்ள

என்று கூறுகிறது. அதாவது கடைச் சங்க காலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குமரிக் கண்டத்தை (லெமுரியா) கடல் கொண்டபோது தற்போது இருக்கும் இமயமலையை விட பல மடங்கு பெரிதான குமரிக்கோடு என்ற மாமலையையும் அதிலிருந்து உற்பத்தியான குமரி ஆறு பஃறுளியாறு ஆகிய இரு நதிகளையும் கடல் கபளீகரம் செய்திருப்பதைத் தமிழ் பேரகராதி குமரி ஆறு என்ற தலைப்பின் கீழ் இவ்வாறு குறிப்பிடுகிறது.

இது தென்பாற் கண்ணதாகிய ஒராறு இதனையுள்ளிட்ட நாற்பத்தொன்பது நாடுகள் கடையூழி இறுதிக் காலத்தில் கடல் கொண்டழிந்து போயின. அதன் வடபால் நாடு பின்னர்க் குமரிநாடு என்றும் அக்கடல் குமரிப் பௌவ மென்றும் பழைய பெயரே பெற்று வழங்கப்படுவன வாயின

இப்படி உலகம் முழுவதும் உள்ள புராண இதிகாசங்களும் கர்ண பரம்பரை நம்பிக்கைகளும் ஜலப்பிரளயம் ஒன்று பூமியில் ஏற்பட்டு ஒரு கண்டத்தையே அழித்த விதத்தை பல கோணங்களில் வேறு வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டாலும் அவைகள் அனைத்தும் ஒரே விஷயத்தைத்தான் கூறுகின்றன என்பதை நம்மால் உணர முடிகிறது.

இப்படி பிரளயத்தப் பற்றிய ஒற்றுமைக் கூற்றுகள் உள்ளது போலவே சாவு அனுபவங்களைப் பற்றியும் ஒற்றுமையான கருத்துக்கள் தான் சொல்லப்பட்டுள்ளன. இந்தக் கூற்றுக்கள் எவற்றையும் அறிவியல் ஏற்றுக் கொள்ளாது மாறாக எள்ளிநகையாடும் என்று நமக்குத் தெரியும். ஆனால் உண்மைகள் எப்போதும் விஞ்ஞானத் தன்மை பெற்றதாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே மரண அனுபவம் இப்படியும் இருக்கலாம் என நாம் நம்பலாம். இருப்பினும் இன்னும் சரியான முறையில் ஆய்வுகள் நடந்தால் பல உண்மைகளை மனிதகுலம் பெறலாம்...

நன்றி: உஜிலாதேவி.

No comments:

Post a Comment